பொங்கலோ பொங்கல் !!
  • On January 15, 2019
  • By Administrator
பொங்கலோ பொங்கல் !!

பொங்கலோ பொங்கல் !! தமிழ் மாதங்களிலேயே மிகச்சிறப்பு வாய்ந்த மாதம் தை மாதம். “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது தமிழர்களின் நம்பிக்கை. ௮ந்த நம்பிக்கையில், தமிழர்கள் தை மாதம் முழுவதும் திருமணம் ௨ட்பட பல நல்காரியங்களை நடத்துவார்கள். தை மாதத்திலேயே மிகவும் சிறந்த பண்டிகை தைமாதப்பிறப்பன்று கொண்டாடப்படும் அறுவடைத் திருநாளாகிய பொங்கல் பண்டிகை. தமிழர்களின் மிகச்சிறந்த பண்டிகை பொங்கல் பண்டிகையே ௭ன்று சொன்னால் மிகையாகாது. இது தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல், உலகம் முழுதும் தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடி வரும் பண்டிகை. சில நாடுகளில் பொங்கல் பண்டிகையன்று அரசு விடுமுறையும் கூட விடுகிறார்கள். பல தமிழர்கள் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டின் முதல் நாளாகவும் கொண்டாடி வருகிறார்கள். பொங்கல் பண்டிகை தமிழர் திருநாள், தைப் பொங்கல், அறுவடைத் திருநாள் என்றெல்லாம் கூறப்படும்,   பொங்கல் பண்டிகை எந்த காலத்தில் இருந்து கொண்டாடப்படுகிறது என்று உறுதியாகத் தெரியவில்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பண்டிகை இருந்தது என்று ஒரு கருத்து உள்ளது. சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு புதியீடு என்று பெயர் இருந்தது. அதாவது, ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள். உழவர்கள் தை மாதத்தின் முதல் நாளில், அந்த ஆண்டின் முதல் அறுவடையை மேற்கொள்வது வழக்கமாக இருந்தது. இதுதான் பின்னர் பொங்கல் பண்டிகையாக மாறியது என்கிறார்கள். பொங்கல் பண்டிகை மொத்தம் 3 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. முதல் நாள் (அதாவது தமிழ் மாதப் பிறப்பிற்கு முன்னாள்) போகி பண்டிகை. அதற்கடுத்த நாள் மாதப்பிறப்பன்று பொங்கலிடும் நாள். 3வது நாள் மாட்டுப் பொங்கல். நமக்கு காலமெல்லாம் கை கொடுத்து உதவும் மழை, சூரியன், விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகள் ஆகியவற்றுக்கு நன்றி கூறும் நல் வாய்ப்பாக இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது. போகி... பொங்கல் திருநாளின் முதல் நிகழ்வான போகி பண்டிகையன்று, அதிகாலையில், அனைவரும் எழுந்து குளித்து, வீட்டில் உள்ள தேவையற்ற, பழையை பொருட்களை வீட்டின் முன்பு வைத்து தீயிட்டு கொளுத்துவார்கள். இது நம் தாய்நாட்டுப்பழக்கம். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற மொழிக்கேற்ப போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வீட்டுப் பொங்கல்... 2வது நாளான பொங்கல், விசேஷமானது. தை மாதப் பிறப்பு நாள் இது. தைப்பொங்கல் என்றும் இந்த பண்டிகைக்குப் பெயர். புதுப்பானை எடுத்து, மஞ்சள் உள்ளிட்டவற்றை பானையைச் சுற்றிக் கட்டி, புதுப் பாலில், புது அரிசியிட்டு, வெல்லம் உள்ளிட்டவற்றைக் கலந்து பொங்கலிடுவார்கள். வீட்டுக்கு வெளியே சூரியன் இருக்கும் திசையை நோக்கி இந்த பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெறும். அரிசி நன்கு சமைந்து, பொங்கி வரும்போது குலவையிட்டும், பொங்கலோ பொங்கல், பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக என்ற குரலோடு பொங்கல் பானையை இறக்க வேண்டும். நன்கு பொங்கி வந்தால் அந்த ஆண்டு முழுவதும் நல்ல வளமும், நலமும் நிலவும் என்பது ஐதீகம். அரிசி பொங்கி வருவதனால்தான் இந்த பண்டிகைக்கு பொங்கல் பண்டிகை என்று பெயர்.. மாட்டுப் பொங்கல்... 3வது நாள் விழா மாட்டுப் பொங்கல். கிராமங்கள் தோறும் மாட்டுப் பொங்கல் விமரிசையாக கொண்டாடப்படும். வீடுகள் புதுப் பூச்சு காணும். மாடுகள், பசுக்களின் கொம்புகளுக்கு புது வர்ணம் பூச்சி, நன்கு குளிப்பாட்டி, அவற்றை அலங்காரம் செய்து, மாட்டுப் பொங்கல் தினத்தின்போது படையலிட்டு வழிபாடு செய்வார்கள். பின்னர் மாடுகளுக்கு பொங்கலும் அளிக்கப்படும். ஆண்டெல்லாம் நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் தினமாக இது கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தின்போது மாடுகளுக்கு ஒரு வேலையும் தர மாட்டார்கள். கழுத்தில் புது மணி கட்டி, கொம்புகளை சீவி விட்டு சுதந்திரமாக திரிய விடுவார்கள். இந்த இடத்தில்தான் ஜல்லிக்கட்டு தோன்றியிருக்கிறது. இப்படியாக பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது தவிர நான்காவது நாள் காணும் பொங்கலாக வட மாவட்டங்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது உற்றார், உறவினர், நண்பர்களைக் கண்டு வாழ்த்துக்களையும் இனிப்புகளையும் பரிமாறிக் கொள்ளும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. கரும்புகளுக்கு பொங்கல் பண்டிகையின் போது தான் மிகவும் கிராக்கி. இன்று முழுவதும் கரும்பு சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். இந்த நாட்களில் நம் நாட்டின் பாதைகளில் வண்டிகள் நெல்லையும் கரும்பையும் சுமந்து செல்லும் காட்சி கண்கொள்ளாக்காட்சி.. தமிழர்கள் அனைவரும் இந்த இனிய நாளை, அளவில்லா சந்தோஷத்துடனும், தித்திப்புடனும் கொண்டாட வாழ்த்துவோம். அதே சமயம், வரும் ஆண்டில் எல்லா வளமும், நலமும் பெற்று அமைதியுடன் வாழவும் சூரியக் கடவுளைப் பிரார்த்திப்போம். இணைந்து தொகுத்தவர்கள்: கிடாம்பி ராஜ், கல்யாணசுந்தரம்